எமது சங்கத்தின் காரைநகருக்கான சேவைகள் மற்றும் உண்டியல் நிதியிலிருந்து பிற இடங்களுக்கான மருத்துவ சேவைகள் இந்த நிதியாண்டிலும் பாரியளவில் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அறிக்கை 1.4.2022 முதல் 31.3.2023 வரையான காலப்பகுதிக்கு உரியது. 

எமது சங்கத்திடமிருந்த நிதியுடன் குறிப்பிட்ட செயல்திட்டங்களுக்கென வழங்கப்பட்ட தனிப்பட்ட செயல்திட்ட நிதிகள் என்பவற்றை வைத்து இந்த நிதியாண்டில், இலங்கை ரூபாவில் சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெறுமதியான செயல்திட்டங்கள் எம்மால் காரைநகரிலும், பிற இடங்களிலும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

எமது செயல்திட்டங்கள் தொடர்பான சுருக்கமான விபரங்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

இளையோர் மேம்படுத்தல்

இளையோர்களின் சமூக செயட்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, காரைநகரில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
1. காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்- ரூபா 500,000
2. களபூமி விளையாட்டுக்கழகம் – ரூபா 500,000
3. தோப்புக்காடு விளையாட்டுக்கழகம் – ரூபா 135,000
4. இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம் – ரூபா 500,000
5. கோவளம் விளையாட்டுக்கழகம் – ரூபா 500,000

இவற்றுக்கு மேலதிகமாக, தனிநபர் செயல்திட்டம் ஒன்றின் ஊடாக காரை சலெஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு £ 9,500 நிதி இந்த நிதியாண்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியில் குறித்த விளையாட்டுக்கழகத்தின் மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது..

 


வைத்திய சேவைகளுக்கு உறுதுணை

(1) காரைநகர் வைத்தியசாலை

காரைநகர் நோயாளர் நலன்புரிச்சங்கத்திற்கு எமது சங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட வங்கி கணக்கு திறக்கப்பட்டு அது சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளது. அவர்களின் வங்கி விபரம்: கணக்கு இலக்கம் 89389640, வங்கி : இலங்கை வங்கி, கிளை : காரைநகர். வலந்தலை வைத்தியசாலைக்கு நேரடியாக உதவ விரும்புவார்கள், குறித்த வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்கலாம். எமது சங்கத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.

எமது சங்கத்தினால் பாரிய அளவிலான திருத்த வேலைகள் காரைநகர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி 2022/2023 நிதியாண்டில் மட்டும், £ 7449.11 நிதியானது காரைநகர் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


(2) மூளாய் வைத்தியசாலை 

தனிநபர் செயல்திட்டம் ஒன்றின் ஊடாக மூளாய் வைத்தியசாலைக்கு £ 1,750 நிதி இந்த நிதியாண்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியில் குறித்த மூளாய் வைத்தியசாலையில் துப்பரவு பணி இடம்பெற்று வருகிறது.


(3) யாழ்ப்பாண வைத்தியசாலை 

எமது சங்க உண்டியல் நிதியில் இருந்து, யாழ்ப்பாண வைத்திய சாலையின் கோரிக்கைக்கு இணங்க ரூபா 600,000 பெறுமதியான மருந்துப் பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும் அதே நிதியில் இருந்து, யாழ் வைத்தியசாலை சுகாதார பணியாளருக்கு, போக்குவரத்தை இலகுபடுத்தும் செயல்திட்டத்திற்கு ரூபா 550,000 பெறுமதியில் 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

கல்வி

எமது சங்கத்தின் ஊடாக அனுப்பப்படும் வைத்தியர் தியாகராஜா நிதியத்திற்கு, இந்த வருடத்தில் £ 6,250 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வியாவில் பாடசாலையின் மைதான பராமரிப்பிற்கென £ 500 எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலுமொரு தனிநபர் உதவியின் ஊடாக, காரைநகரில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கும், கிளிநொச்சியில் அமைத்துள்ள பாடசாலைகளுக்கும், கல்வி மேப்பாட்டுக்காக £ 625 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நீர்

J/45 கிராம சேவையாளர் பிரிவில் பொதுக்கிணறு ஒன்றை அமைப்பதற்கான அனுப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, ரூபா 500,000 கொடுத்து பொதுக்கிணறு வேலையை முடிக்க உதவி வழங்கப்பட்டுள்ளது.

 

சக்கலாவோடையில் மழைநீரால் போக்குவரத்து வீதி தொடர்ச்சியாக சேதமடைவது தொடர்பாக, பிரதேச சபையால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு எமது சங்கம் ரூபா 500,000 நிதியினை வழங்கி உதவி செய்துள்ளது. மழைநீரினை கடலில் கொண்டுபோய் கடலில் விடுதலில் எமது சங்கத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும், போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க குறிப்பிட்ட பரீட்சார்த்த முயற்சியில் எமது பங்களிப்பையும் வழங்கினோம்.


பிரித்தானியா வாழ் காரை மக்களின் நலன்

மேற்படி குறிக்கோளிற்கு அமைவாக, எமது சங்கத்தினால் வருடாந்தம் காரை சங்கமம் எனும் விளையாட்டு விழாவும், காரை கதம்பம் எனும் கலாச்சார விழாவும் நடத்தப்படுவது யாவரும் அறிந்ததே. அதற்கமைய இந்த நிதியாண்டிலும் காரை சங்கமம் மற்றும் காரை கதம்பம் என்பன சிறப்பாக, நிறைந்த அவையினருடன் நடாத்தி வைக்கப்பட்டுள்ளது. வழமைபோல், இவ்வருட நிகழ்களிற்கும் எமது சங்க பொதுநிதி பயன்படுத்தப்படாமல், நிகழ்விற்கென நிதி சேகரிக்கப்பட்டு மிகையுடன் நடத்தப்பட்டுள்ளது.

 


நீங்கள் செய்ய வேண்டியது…..

பிரித்தானிய வாழ் காரைநகர் மக்களாகிய நீங்கள் எமது செயட்பாடுகள் செவ்வனே நடப்பதை மேலேயுள்ள அறிக்கைமூலம் உறுதி செய்யலாம்.

எனவே எமது செயட்பாடுகளை சிறப்பாக செய்ய தங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
– அங்கத்துவ பணம்
– நன்கொடைகள்
– தனிப்பட்ட செய்திட்டங்கள்
– உண்டியல் நிதி சேகரிப்பு
என்பவற்றின் ஊடாக உங்கள் பங்களிப்பை வழங்கி எமது செயற்பாட்டை தொடர உதவவேண்டும்.

பெருமளவிலான செயல்திட்டங்களை செய்தல், எமது சங்கம், தொடர்ந்து செல்ல நிதியுதவி தேவையாக உள்ளது. உங்களின் ஒத்துழைப்பு, காரைநகரை மேம்படுத்த கிடைக்கும் என நம்புகிறோம்.


“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
        தாழாது உஞற்று பவர்”⁠ (திருக்குறள் – 620)