நீண்டகாலமாக திருத்தப்படாமல் பாவனையில் இல்லாமல் இருந்த வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பாவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வலந்தலை வைத்தியசாலை சாதாரண பிரசவங்கள் மேற்கொள்ளத்தக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுவும் கொரனா (COVID 19) எனும் கொடிய நோய் பரவி, அந்தந்த பிரதேசங்களுக்குள்ளேயே மக்கள் முடக்கப்படும் நிலையில், சாதாரணமான சிக்கல் இல்லாத பிரசவங்களினை காரைநகருக்குள்ளேயே மேற்கொள்ளத்தக்க சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மகப்பேற்று விடுதியின் தாய்மார்கள் பயன்படுத்தும் குளியலறை, மலசல கூடம் என்பன புனரமைக்கப்பட்டதுடன் விடுதியின் ஓர் பகுதி வர்ணமும் தீட்டப்பட்டும் வைத்தியர் அறை ஒன்றும் புனரமைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த வேலைகளுக்காக 300,000 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயின் கருப்பையிலுள்ள சிசுவின் இதயத்துடிப்பு வரைபை அறியும் கருவி (CTG) ஒன்றும் எமது சங்கத்தினால் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் பெறுமதி 325,000 ரூபா.
மேற்படி மகப்பேற்று விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக எமக்கு கோரிக்கை அனுப்பி எம்முடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் விமலினி (D M O) மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நந்தகுமார் (M H O) ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்குகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் வைத்தியர் சரவணபவா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கர்ப்பவதிகளை பார்வையிட்டு வருகிறார். வைத்தியர் சரவணபவா அவர்களுக்கும், காரைநகர் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மற்றும் காரைநகர் மைந்தன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் மற்றுமோர் உன்னதமான பணியில் அடுத்த அங்கமாக பிரதேச வைத்தியசாலைக்கு Ultra Sound Scan ஒன்று 28 லட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளமையையும் இவ்விடத்தில் நினைவு படுத்துகிறோம். அவ்வியந்திரமும் இந்த மகப்பேற்று விடுதியில் அமையப் பெற்றிருக்கிறது.
பிற திருத்த வேலைகளை மேற்கொண்ட சமூக நலன்விரும்பிகளுக்கும் எமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
எமது சங்கத்தினால் திருத்த வேலைகள் செய்யப்படமுதல், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவின் நிலவரத்தை கீழ்வரும் புகைப்படங்களில் காணலாம்.