3

எமது ஊரில் நன்னீர் பிரச்சனை என்பது நெடுநாளைய பிரச்சனை. இதில் முக்கியமாக எமது காரைநகர் மழைநீரை மட்டுமே நம்பியே தமது நன்னீர் தேவையை நிறைவு செய்திருந்தது.


ஆனால் காலப்போக்கில், காரைநகர் மக்களுக்கு நன்னீர் போதுமானதாக இல்லை எனும் நிலை வந்திருக்கிறது. இதற்கு பிரதானமாக எமது காரைநகரில் மழைநீர் உரிய முறையில் சேமிக்கப்படவில்லை.


எனவே காரைநகர் மக்கள் மழைநீரை சேகரிக்கத்தக்க பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து, இயலுமானவரை மழைநீரை சேமிக்க முயலவேண்டும்.


மழைநீரை பல்வேறு வழிமுறைகளில் நாம் சேமிக்கலாம். யார் மழைநீரை சேமிக்க முயல்கிறார் என்பதை பொறுத்து அது வேறுபடலாம்.


தனிப்பட்டோரினால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள்


  • கூரையில் விழும் மழைநீரை குழாய்மூலம் சேகரித்து நிலத்தின் கீழ் செலுத்துவது.

பின்வரும் புகைப்படம் அதை விளங்கப்படுத்தலாம்.

கூடிய செலவை ஏற்படுத்த கூடியது
  • இந்த திட்டம் இலகுவானதாக தெரிந்தாலும் பல்வேறு குறைபாடுகளை கொண்ட முறைமையாகும். குறிப்பாக காரைநகர் போன்ற அடிக்கடி மழைவீழ்ச்சியை சந்திக்காத கிராமங்களுக்கு இது பெரிதும் பயன்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே.
  • கொழும்பு, சென்னை, டெல்லி, லண்டன் போன்ற மிக நெருக்கமாக மக்கள் வாழும் பகுதிகளுக்கே இது செலவழிக்கும் பணத்திற்கு ஏற்ற பயனை தரும் என கூறலாம். ஏனெனில் மிக நெருக்கமான அமைக்கப்பட்ட வீடுகள், மழையாக பொழியும் பெரும்பாலான மழைநீரை ஏந்தி குழாய்வழியே கிடங்கினுள் இறக்கி சேமிக்க உதவியாக இருக்கும்.
  • கூடியளவு செலவு. நகரத்திற்கு ஏற்ற வழிமுறை எனும்போதே இது கிராமத்திற்கு அவ்வளவு தூரம் உதவியை வழங்கிட போவதில்லை என புரிந்து விடுகிறது. கிராமத்தில் உள்ள பணம் படைத்தவர்களும், வெளிநாட்டு உதவி கிடைப்பவர்களுமே இந்த முறையில் நீரை சேர்க்க முடியும். (ஒரு சில வெளிநாடு வாழ் தனிப்பட்டவர்கள், இதற்கான நிதியை சேர்த்து வழங்க இருப்பதாக தகவல்கள் உண்டு).
  • காரைநகரில் உள்ள எல்லா வீடுகளும், இந்த திட்டத்திற்கு ஒத்துவரத்தக்க வசதியான கூரையை உடையவையா என்பது பெரிய கேள்வி.
  • செய்யும் செலவுக்கு ஏற்ற அளவில் பலன் கிடைப்பதில்லை, இந்த திட்டத்தால் கிராமங்களில். கிராமங்களில் பெரிய பரப்புகளில் வளவுகளும், சிறிய அளவிலான பரப்பை உடைய ஓடுகளுமே உள்ளது. இந்த நிலையில் இந்த முறையில் மழைநீரை சேமிக்க முற்படும் நீரைவிட, இந்த முறையில் சேமிக்க முடியாத அளவில் உள்ள மழைநீரே பெருமளவில் உள்ளது.
  • மேற்கூறிய குறைபாடுகளால் இந்த முறையில் மழைநீரை சேர்ப்பது பணம் படைத்தவர்களுக்கே சாத்தியப்படுவதால், ஒட்டு மொத்த கிராமத்திற்கும் உகந்ததாக ஆவண செய்ய முடியாமல் உள்ளது.

  • வீட்டு வளவினுள் விழும் மழைநீரை வளவினுள் உள்ளேயே ஒரு குழியை உருவாக்கி, மழைநீரை சேகரிக்கலாம்.

மேற்கூறிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மழைநீரை ஏந்தி சேமிக்க தயாராகவுள்ள பரப்பளவை கூட்டி, தனிப்பட்டவர்கள் தங்கள் வளவினுள் மழைநீரை சேமிக்கும் இந்த திட்டம் ஆவண செய்யலாம்.

வளவின் சுற்று எல்லைகளை உயர்த்தி, வளவின் உள்ளே மழையாக பெய்யும் மழைநீரை சேமிக்கும் முறையாக இந்த முறை கூறப்படுகிறது.

வளவின் பள்ளமான பகுதியில் ஒரு குழியை ஏற்படுத்தி விட்டால், அது மழைநீரை மிகவேகமாக நிலத்தின் உள்ளே கொண்டுசெல்ல வழிசமைக்கும்.

அந்த குழிகளுக்கு உரிய மூடிகள் அமைக்கப்படவேண்டும். ஏனெனில் அது தேவையற்ற விபத்துகளை தவிர்க்க உதவும். மற்றும் நுளம்பு பெருக்கத்தில் இருந்தும் பாதுகாப்பை வழங்கும்.

வளவினுள் உள்ள, மழைநீரை உள்ளே செலுத்த தக்க கிடங்குகள். பாதுகாப்பான மூடியையும் கவனிக்க.
தொடர்மாடி குடியிருப்பில் கூட இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். வீட்டு வளவு முழுவதும் சீமெந்து போடுபவர்களும் இந்த முறையை பயன்படுத்தி, மழைநீரை நிலத்தின் கீழே செல்ல வழி செய்யலாம்.

வீட்டு வளவு எல்லையின் உள்ளே பள்ளமான பகுதியில் ஒரு குழியை உருவாக்கி, மேற்கூறிய முறையில் குழிக்கு மூடியை உருவாக்கி பெரிதாக குப்பைகள் சேராத மழைநீரை நிலத்தடியில் சேமிக்கலாம்.

  • நிலத்தின் கீழே செலுத்தும் மழைநீரில் கலந்துள்ள குப்பைகள் அகற்றப்படவேண்டும்.

மேற்கூறிய திட்டங்கள் தனிப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய முறைகள் ஆகும். தனிப்பட்டவர்கள் என்பது தாண்டி, பாடசாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குரிய வளவுகளில்/காணிகளில் இப்படியான செயல்பாடுகளை செய்ய முன்வரலாம். அப்படியானவர்கள் இந்த திட்டங்களுக்கு ஏற்படும் செலவையும், அதனால் வரத்தக்க பலனையும் கருத்தில்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.


நிறுவனங்களால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள் : பெரிய அளவில், எல்லோருக்கும் பொதுவாக


  • இதுவரை நாம் தனிப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் பயன் அளிக்க தக்கதான முறைகளை பார்த்தோம்.
  • பல குடிகளுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களையும் நாம் ஆராயவேண்டும்.
  • எம்போன்ற அமைப்புகள் பொது பயன்பாட்டிற்கு உதவத்தக்க திட்டங்களையே இனம்கண்டு, நடைமுறைப்படுத்தலாம்.
  • எமது சங்கம் இப்படியான திட்டங்களை காலம் காலமாக செய்து வருகிறது.
  • – பொது கிணறுகளை அமைத்தல், புனரமைத்தல்
  • – கோவில் கேணிகளை புனரமைத்தல்
  • – பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு குளங்களை புனரமைத்தல்
  • – அணைகளையும், குளங்களையும் அமைத்தல்

  • அணைகளை உருவாக்கி அதன்மூலம் மழைநீரை சேகரித்து வைத்தல்

எமது சங்கம் பல அணைகளை காரைநகரில் கட்டி மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கள்ளந்தாழ்வு அணை
கிளுவனை அணை

மழைநீரை சேமிக்கவென அமைக்கப்படும் அணைகளும், குளங்களும் காரைநகரின் நில அமைப்பையும், கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம் என்பதையும் மேலும் மழைநீர் வழிந்தோடும் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தடங்களை அடிப்படையாக கொண்டே அமைக்கப்படவேண்டும்.


காரைநகரின் கடல் மட்டத்தில் இருந்துள்ள உயரத்தை பின்வரும் வரைபடத்தில் இருந்து அடையாளம் காணலாம்.

https://en-in.topographic-map.com/maps/2szp/Karainagar/


காரைநகரின் மழைநீர் வடிகால் அமைப்பு பற்றிய தரவு சேகரிக்கப்படுகிறது. அவை கிடைத்தவுடன் இங்கே பிரசுரிக்கப்படும்.


  • தெருவில் வழிந்தோடும் மழைநீரை சேகரித்தல்

காரைநகருக்கு நாம் செல்லும்போது, மழை பெய்துகொண்டிருந்தால், பெருமளவு மழைநீர் வீதி வழியே ஓடிக்கொண்டு இருப்பதை அவதானித்து இருப்பீர்கள். அந்த மழைநீர் தெருவழியே ஓடி,

  • அங்கங்கே தேங்கி தெருக்களை பழுதாக்குகிறது
  • அங்கங்கே தேங்கி நுளம்பு பெருக்கத்திற்கு உதவுகிறது (நம்மூரில் கொசுதொல்லை பெரும்தொல்லை என்பது யாவரும் அறிந்ததே)
  • சிதறி சிதறி நின்று ஆவியாகிறது
  • அணைகளுக்கும், குளங்களுக்கும் முழுமையாக சென்றடையாமல் வீணாகிறது
  • திடீரென வெள்ளம் சேர்ந்து அணைகளுக்கும் தேவையற்ற பல்வேறு அழுத்தத்தை கொடுக்கலாம்.
  • இதனால் பெருமளவு மழைநீர், எமக்கு பயன்கொடுத்திருக்கக்கூடியது, ஆனால் கடலில் சென்று கலந்து விடுகிறது.

என பல காரணிகளை கருத்தில் கொண்டு, தெருவில் ஓடும் மழைநீரை ஆங்காங்கே சேமிக்க முயலலாம் என ஆராயப்படுகிறது. அதற்காக “தெருவோர மழைநீர் சேகரிப்பு ” (Roadside Rainwater Harvesting) எனும் முறையை காரைநகருக்கு கொண்டுவரலாம் என எண்ணுகிறோம்.


இது மேலைநாடுகளிலும், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலும் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளத்தக்க வழிமுறையாகவும் இந்த தெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் முறை உள்ளது.


எமது காரைநகரிலும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழத்தொடங்கி விட்டார்கள். எனவே அணைகளையோ, கேணிகளையோ அவ்விடங்களில் அமைத்தல் சாத்தியமான ஒன்றாக புலப்படவில்லை.


எனவே தெருவில் வழிந்தோடி கடலை நோக்கி ஓடும் மழைநீரை ஆங்காங்கே நிலத்தினுள் இறக்கிவிடத்தக்க வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

தெருக்கால்வாயில் ஓடும் நீரை நிலத்தினுள் இறக்குவது.
மழைநீர் வழிந்தோடும் பகுதிகளில், குழாய்களை புதைத்தல்.
இதுவும் மழைநீரை உள்ளே இறக்க அமைக்கப்பட்டது.
உதாரணம்
குழியை பிறிதொரு இடத்திலும் வைக்கலாம்.
தெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் புள்ளிகளை உருவாக்கி பெறப்படும் மழைநீரை, பிறிதொரு இடத்தில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் நீரை சேகரிக்கலாம்.
பல்வேறு மழைநீர் சேகரிக்கும் புள்ளிகளுக்கு ஒரு பாரிய பொது தொட்டியை அமைத்தும் சேகரிக்கலாம்.
சிறுவிளக்க படம்
இப்படியான முறையிலும் உள்ளே இறக்கலாம்.

  • மழைநீரை சேகரிக்கும்போது, இயலுமானவரை வடிகட்ட வேண்டும். பிரதானமாக தேவையற்ற குப்பைகள் நீர் சேகரிக்கும் செல்வது திட்டத்தையே பாழாக்கிவிடும். அல்லது பராமரிப்பு செலவு கூடும். நிலத்தடி நீரையும் மாசுபடுத்தலாம்.
  • மழைநீரை நிலத்தடிக்கு இறக்கும்போது கடல்நீர் மட்டம் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
  • பல்வேறு இடங்களில் மழைநீரை நிலத்தின் கீழ் செலுத்துவதே எமது ஊர் போன்ற இடங்களுக்கு பயன் தரக்கூடியது.

எமது இந்த மழைநீர் சேகரிப்பு பற்றிய அலசல் இன்னும் விரிவாக்கப்பட இருக்கிறது. தங்களிடம் இது பற்றி ஏதும் மேலதிக கருத்துக்குள் இருந்தால் எமக்கு info@karainagar.org எனும் முகவரிக்கு தெரிவிக்கலாம்.


நன்றி