காரைநகர் சைவமகாசபையினால் “காரைநகர் குடிநீர் தேவையை பூரணப்படுத்தும் நன்னீர் வலய மேம்பாட்டுத்திட்டம்” எனும் மழைநீர் சேகரிப்பு திட்டம் எமது சங்கத்தை நோக்கி, அனுசரணை வழங்குமாறு முன்வைக்கப்பட்டது.


கிளுவனை, ஆலங்கண்டடி, கிராவத்தை, கோவளம், மல்லிகை, தம்பன், நாராயணி கேணியடி ஆகிய பிரதேசங்களில் அதிகளவு நன்னீர் ஊற்றுகள் இருப்பது சைவ மகா சபையின் தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது.


இப்பிரதேசங்களில் குளங்களை அமைத்தல், ஆழப்படுத்தல், அகலப்படுத்துதல், கடலுக்கு மழைநீர் சென்றடையாது தடுப்பணைகளை உருவாக்குதல் என்பன நன்னீர் இருப்பை காரைநகரில் அதிகரிக்கும் என்பது ஆராய்ந்து அறியப்பட்டது.


அதற்கமைய காரைநகர் கிழக்கு வலயம் மற்றும், காரைநகர் மத்தி வலயம் என இரு நன்னீர் வலயங்கள் தெரிவு செய்யப்பட்டன.


வலயம் 01) காரைநகர் கிழக்கு நன்னீர் வலயம்.

கிளுவனை, திக்கரை, விளானை – தம்பன் அடங்கிய காரைநகர் கிழக்கின் பரந்த பிரதேசத்தில் வற்றாத பல நன்னீர் கிணறுகளின் நீர் மட்டத்தை பாதுகாப்பது அவசியம்.


பிரதானமாக கிளுவனை கேணியின் நீர் குடிப்பதற்கு உகந்தது மற்றும் வற்றாதது. 3 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நன்னீர் வழங்கத்தக்க இயலுமை கொண்டது.

மாரிகாலத்தில் கிளுவனை கேணியை நோக்கிவரும் மழைநீர், அக்கேணி நிரம்பியவுடன், மேலதிகமானது கடலை வீணே சென்று அடைகின்றது.

இதைத்தடுக்க மழைநீர் ஓட்டப்பாதையில் குளங்களை உருவாக்கினால், இப்பிரதேச நன்னீர் வலயத்தை மேலும் அகலப்படுத்தி தொடர்ந்து நிலைபேறாக பேணக்கூடியதாக இருக்கும்.


அந்த வகையில் கிளுவனை வாய்க்காலுக்கு அருகில் உள்ள நெற்பயிர்க்காணி 22 பரப்பை சகாய விலையில் வாங்கி, அங்கே ஒரு குளம் அமைக்க ஆலோசனை தரப்பட்டது.

அதற்கு ஆகும் செலவாக LKR 789,000 சைவ மகா சபையினால் மதிப்பீடு செய்யப்பட்டு, எமது சங்க அனுசரணையையும் கோரப்பட்டது.


கோரப்பட்ட நிதியானது 27.04.2019 அன்று, காரைநகர் சைவமகா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டம் காரைநகர் சைவ மகா சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு சில படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

திட்டம் ஆரம்பித்த பின், 22 பரப்பு என்பதற்கு மேலதிகமாக 11 பரப்பும் இணைக்கப்பட கூடிய சூழ்நிலை வந்தது. ஒரு நலன்விரும்பி தாமாக முன்வந்து தனது காணியையும் இந்த குள கட்டுமானத்தில் இணைக்க இசைந்தார்.

இருந்தபோதும் தனக்கு ஒரு சகாய விலையை, பணம் கிடைக்கும்போது தந்து உறுதியை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கான முயற்சிகளும், குளத்தின் வேலைகளும் நடைபெறுகின்றன. எல்லா வேலைகளும் முடித்தவுடன் உரிய தரவுகள் இடப்படும்.


வலயம் 02) காரைநகர் மத்தி நன்னீர் வலயம்

காரைநகர் மத்தி மழைநீர் தேங்கக்கூடிய பிரதானமான பிரதேசமாக அனைவராலும் அறியப்பட்டது. குறிப்பாக சக்கலாவோடை பிரதேசம் பலகாலமாக மழைநீர் பாரியளவில் தேங்கி நிற்பது காரைநகர் மக்கள் அறிந்ததே.


இப்பிரதேசத்தில் காணப்பட்ட நாவடிக்குளம் சில தசாப்தங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. அதேபோன்று தரவைப் பிரதேசமாகக் காணப்பட்ட பாரிய மழைநீர் தேங்கும் பள்ளக்காணிகள் அண்மைக்காலத்தில் மண் நிரவப்பட்டு காணப்படும் நிலையும் காணப்படுகின்றது.


இப்பிரதேசத்தில் குளம் ஒன்றை அமைப்பதனால் சுற்றயல் பிரதேச நன்னீர்வளம் மேம்படும். எதிர்காலத்தில் அக்குளத்தின் அயலில் குடிநீர் கிணறுகளையும் அமைக்க முடியும்.


அதற்கமைய காரைநகர் சைவமகா சபை சிறுகாணியை (6 பரப்பு) வாங்கி, அதில் குளம் ஒன்றை அமைக்கவென திட்டம் தயாரித்தது.

அதற்கு ஆகும் செலவாக LKR 550,000 மதிப்பீடு செய்யப்பட்டு, எமது சங்கத்தின் அனுசரணையும் கோரப்பட்டது. கோரப்பட்ட நிதியானது 27.04.2019 அன்று, காரைநகர் சைவமகா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த குளம் அமைக்கும் முயற்சியில் பெரும் தடங்கல் ஏற்பட்டது. 2019 May மாதம் முதலாம் வாரத்தில், சைவமகா சபைக்கு குளம் அமைக்க காணி தருவதாக, பல மாதங்களுக்கு முன்னரே சம்மதக்கடிதம் தந்த காணி உரிமையாளரான பெண்மணிக்கு எதிராக, குறிப்பிட்ட காணியின் உரிமம் தொடர்பாக, ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது வழக்காக மாற்றம் பெற்றது.


இதனால் சக்கலாவோடையில் மீண்டும்,

மழைநீரை குளமாக தங்கவைக்க மேற்கொண்ட

எமது முயற்சி தோல்வியில் முடிந்தது.

காணி உரிமையாளரோ தனக்குத்தான் அந்த காணி உரிமை என்றும், அந்த இடத்தில் குளம் வருவதை விரும்பாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இதுவென வாதம் செய்கிறார்.

அதுவொரு பொருளாதார செயட்பாடுகள் கூடிய இடமாகவும் எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.


காரைநகர் மக்களின் நன்னீர் தேவையை பூர்த்தி செய்ய எமது சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முயற்சி, தோல்வியில் முடிந்தது,

காரை மக்களின் நன்னீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையே என கவலையை ஏற்படுத்துகிறது.

குறிப்பு : அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மடைமாற்றிவிடும் வேலை நடைபெறுகிறது.


குறிப்பு –

இதுவொரு மண்ணால் மற்றும் குறைந்த செலவில், இயற்கையோடு ஒற்றி உருவாக்கப்பட்ட அணை. வருடாந்த பராமரிப்பு இவ்வணைக்கு தேவைப்படும். ஏனெனில் பெய்யும் மழை அணையை கரைக்கக்கூடும். மற்றும் கடலை நோக்கிவரும் மழைநீர், மண்ணையும் இழுத்து வந்து அணையின் ஆழத்தை குறைக்க கூடும். காரைநகர் சைவ மகாசபை அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.