



களத்திற்கு வரச்சொன்னார்கள், வந்து நின்றோம், மக்கள் வெள்ளம்போல் வந்து ஆதரவை வழங்கினார்கள்.
நிர்வாகம் எதிர்பார்ததை விட நூற்றுக்கணக்கான காரைநகர் மக்கள் மைதானத்தில் குவிந்தார்கள். கிட்டத்தட்ட 10 இற்கு உட்பட்ட பெரியவர்களும் இளையவர்களுமே மைதான ஒழுங்கமைப்பில் இருந்தனர். இருந்தபோதும் சிறந்த திட்டமிடலுடன் கூடிய நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு வந்த எல்லோரையும் உள்வாங்கியது. சிறந்த ஒழுங்கமைப்புகளும், கட்டுப்பாடுகளும் எவ்வளவு பேர் வந்தாலும் தாக்குப்பிடிக்கும் என்பதற்கு எமது சங்க நிர்வாகமே சிறந்த உதாரணம்.
சிறந்த ஒழுங்குகளும், முறையான நடைமுறைப்படுத்தலுமே இந்த நவீன உலகில் குறைந்த மனித வலுவுடன் சிறந்து செயலாற்ற அடிப்படைத் தேவைகளாகும்.
குறள் 631:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
நிகழ்வறிக்கை
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலான ”காரை சங்கமம் 2024 ” கடந்த ஞாயிறுக்கிழமை 28 /07 /24 அன்று வெகு விமர்சையாக நடந்தேறியது.
மதியம் 11 : 30 மணியளவில் ஆரம்பமாகி பி.பகல் 07 :௦௦ மணிவரை 500 க்கும் மேற்பட்ட பிரித்தானிய வாழ் காரை மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த எமது காரை மண்ணைச் சேர்ந்த கம்பன்கழக தமிழருவி திரு.த.சிவகுமாரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் சிறுவர் பெரியோருக்கான ஓட்டப் போட்டிகள், தடை ஒட்டம், கிளித்தட்டு, துடுப்பாட்டம், உதைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் என பல நிகழ்வுகளிலும் மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறமிருக்க தாயக சிற்றூண்டி வகைகள் மற்றும் கூழ் என உணவுகள் மைதானத்தில் சுடச்சுட வழங்கப்பட்டது. காரை மண்வாசையுடனான ஒடியல் கூழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்நிகழ்வில் இளைப்பாறிய ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு.எஸ்.கே சதாசிவம் அவர்களின் ஆக்கத்தில் வெளிவந்த ”வரலாற்றில் காரைநகர்” எனும் ஆவண நூல் சிறப்பு விருந்தினர் தமிழருவி த. சிவகுமாரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு பலரின் வரவேற்பை பெற்றிருந்தமை விழாவின் சிறப்பு அம்சமாக அமைந்தது. சிறப்பு விருந்தினர் தமிழருவி திரு.த.சிவகுமாரன் அவர்கள் இவ் ஆவண நூலின் நயப்புரையை தொடர்ந்து அம்பாள் முன்பள்ளி புதிய கட்டிட நிர்மாண வேலைகள் பற்றியும், முன்பள்ளிகளின் முக்கியத்துவம் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார். சிவன்கோவில் வீதி, புதுறோட்டில் அமையவிருக்கும் அம்பாள் முன்பள்ளி கட்டிட நிர்மாணத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு பல நல்லுள்ளங்கள் அனுசரணைகள் வழங்கி உதவியிருந்தார்கள், இவர்கள் அனைவருக்கும் பிரித்தானிய நலன்புரிச் சங்க நிர்வாகம் சார்பில் நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் தாராளகுண அனுசரணைகள் இந்நிகழ்வு சிறப்புற அமைய பெரிதும் உதவியது, மீண்டும் ஒருமுறை அனுசரணைகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
இவ்விழா பற்றிய உங்கள் கருத்துக்களை எமது info@karainagar .org எனும் மின்னஞ்சலுக்கு அறியத்தருவதன் மூலம் அடுத்தடுத்த விழாக்களை மேன்மேலும் சிறப்புற நடாத்த எமக்கு ஏதுவாக அமையும்.
நன்றி.
வணக்கம்.
நிர்வாகம்,
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.
எமது அனுசரணையாளர்கள்
பிரதானமானவை
மைதானம் – Everyday குடும்பம்
முதலாம் பரிசு – KKV குலரத்தினம் நினைவாக
கூழ் : KKV சர்வாந்தலிங்கம் மற்றும் அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம்
சிறப்பு
IPOSG Epos Solutions
Four Seasons
மற்றும் தனிப்பட்ட நன்கொடை வழங்கிய 20 இற்கு மேற்பட்டவர்கள்
மேலும் குறிப்பாக எம்முடன் இணைந்து நின்று தமது சரீர சேவையை (ஊழியம்) செய்தவர்களும் குறிப்பாக இளையோர்களும் இங்கே குறிப்பிடப்படவேண்டியவர்கள்.
நிகழ்வின் நிழல்கள் சில





























































